கனவில் வந்த பாம்பு.. மூடநம்பிக்கையால் நாக்கை இழந்த விவசாயி.. நடந்தது என்ன?

snake

கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், அதன்முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்த விவசாயியை கொடிய விஷயமுடைய பாம்பு கடித்தது. 

ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால் பதட்டமடைந்த அவர் தன் மனைவியிடம் அதுகுறித்து கூறியுள்ளார். ஒருவேளை இது பாம்பு தோஷமாக இருக்குமோ என்று அஞ்சிய அந்த தம்பதி, உடனே ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த ஜோதிடரோ, ”ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் உள்ள சாமியார், பாம்புகளை வளர்த்து வருகிறார்.  அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கி, உங்கள் கனவில் பாம்பு வராது” என்று அந்த விவசாயியிடம் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இதனை நம்பிய விவசாயி, ஜோதிடர் சொன்னது போல் ஈரோட்டில் உள்ள அந்த கோவிலுக்கு சென்று அவர் சொன்னதுபோலவே  பாம்புகளை வளர்க்கும் சாமியாரை சந்தித்து, கொடிய விஷமுடைய கட்டுவிரியன் பாம்புமுன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்துள்ளதாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Snake Bites: Types, Symptoms, and Treatments

அப்போது, பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட விவசாயியை கொடிய விஷமுடைய கட்டுவிரியன் பாம்பு அவரது நாக்கை திடீரென கடித்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் சாமியார், உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறவே அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். 

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.