Tamil News
Tamil News
Monday, 10 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீனவர்கள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் கடைகளை அமைத்துள்ளதால் காலை முதல் இரவு வரை அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.  இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளால் சென்னை மாநகராட்சியை கேள்வி எழுப்பியது. 

கடகளை அகற்றக்கோரி உத்தரவு

லூப் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறிய நீதிபதிகள், மீன்களை கழுவுவதற்கா சாலைகள்,? நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என்று லூப் சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிற கடைகளை அகற்றக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

உத்தரவையடுத்து, கடைகள் அகற்றம்

இந்தநிலையில், நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை இணைந்து, லூப் சாலையில் உள்ள கடைகளை அகற்றி வருகிறார்கள். இதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், மீனவர்கள் வைத்திருந்த மீன்களை தரையில் கொட்டி, கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மீனவர்கள் எதிர்ப்பு

கடைகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், 'நொச்சிக்குப்பம் எங்களுடைய பாரம்பரிய இடம். இது எங்களுடைய வாழ்வாதாரம். நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் வெறும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல; பேரிடர் காலத்தில் படகில் நூற்றுகணக்கான மக்களை காப்பாற்றியவர்கள். அன்றைக்கு காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் மீனவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இப்போது அதே அதிகாரிகள் எங்களை வெளியேற்றச் சொல்கிறார்கள் இது எந்த விதத்தில் நியாயம்' என்று அங்குள்ள மக்கள் பரிதவிக்கிறார்கள்.

'நொச்சிக்குப்பம் மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மைந்தர்கள். கலங்கரை விளக்கத்திலிருந்து பட்டினப்பாக்கம் வரை வேகமாக சென்று அங்குபோய் என்ன செய்யபோகிறீர்கள் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கான தீர்வாக, சாந்தோம் சாலையையும், காமராஜர் சாலையையும் விரிவுபடுத்தினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது' என்ற தீர்வை முன்வைத்து கடைகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகிறார்கள்.