Tamil News
Tamil News
Friday, 14 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

சூடி பிடிக்கும் பிரச்சாரம்

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரும். கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேட்டி அளித்தார்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை

ஹிஜாப் மற்றும் ஹலால் விவகாரத்தை கட்சி எவ்வாறு கையாண்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நான் இந்த நிலைப்பாட்டில் தான் உள்ளேன். இவை தேவையில்லாத பிரச்சினைகள். இதுபோன்ற விஷயங்களை நான் ஆதரிக்க மாட்டேன்” என்றார்.

பொம்மை இதை செய்ய வேண்டும்

எடியூரப்பாவின் கருத்துக்கள் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வந்துள்ளன. குறிப்பாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் நடத்திய யஷ்பால் சுவர்ணாவுக்கு பாஜக தேர்தலில் டிக்கெட் வழங்கியுள்ள நிலையில் எடியூரப்பா கருத்துகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு கர்நாடக புத்தாண்டு பண்டிகையான உகாதிக்குப் பிறகு கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்பதற்கு எதிராகவும், இந்துக்கள் ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க கோரியும் வலதுசாரி குழுக்கள் அழைப்பு விடுத்தது. மேலும் இது “பொருளாதார ஜிகாத்” என்று கூறப்பட்டது. பிரிவினைவாத அரசியலைப் பயன்படுத்தி வாக்காளர்களை துருவப்படுத்த பாஜகவின் மற்றொரு முயற்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

மற்ற மத நிகழ்சிகளில் பங்கேற்க வேண்டும்

தொடர்ந்து, முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்புகள் இருந்தும் தேவாலய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து கேட்டதற்கு எடியூரப்பா, நான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். மற்ற சமூக திட்டங்கள் கூட செல்வேன். பொம்மை செல்வதும் வழக்கம். அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் சென்றிருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்ல வேண்டும் என்றார்.

மகன் விஜயேந்திரா- வாரிசு

4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா தற்போது தேர்தல் அரசியலில் விலகியுள்ளார். இருந்த 80 வயதான அவர் பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினராக உள்ளார். பா.ஜ.கவில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் போராட்டம், கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறுகையில், பாஜகவின் கிளர்ச்சி கட்சியை பாதிக்கப் போவதில்லை. சில தொகுதிகளில், கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவது ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாம், ஆனால் கட்சி இதனால் பாதிக்கப்படாது என்றார்.

பாஜக பெரும்பான்மை பெறும்

தொடர்ந்து, ஷிகாரிபுராவில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனது மகன் பி ஒய் விஜயேந்திரா தனது அரசியல் வாரிசாக வேண்டும் என்று தான் “நிச்சயமாக” விரும்புவதாக அடிக்கோடிட்டுக் காட்டினார். பிரதமர் மோடியின் புகழ், அவரது நலத்திட்டங்கள் மற்றும் அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட சமூக நல முயற்சிகள் மற்றும் பொம்மை அரசின் நடவடிக்கைகள் ஆகியவை “பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறுவதை” உறுதி செய்யும் என்றார்.