Tamil News
Tamil News
Sunday, 16 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் எழுத்துத் திறமையை போற்றும் வகையில், மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இந்த பேனா நினைவுச் சின்னம் மெரினா கடற்கரைப்பகுதியில் 8,550 சதுர மீட்டரில், ரூ.81 கோடியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. 

கருத்துக்கேட்பு கூட்டம்

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூட்டியது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், கட்டப்பஞ்சாயத்து இயக்கம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். திமுகவினர் பலரும் குழுமியிருந்தனர். பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா சிலை அமைத்தால் அதை உடைப்பேன் என்று பேசியிருந்தார். இதனால், கூட்டத்தில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் சலசலப்பு ஏற்பட்டது.  

மேலும், பாஜக பிரதிநிதி முனுசாமி, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலையைவிட, கருணாநிதிக்கு பெரிய சிலை அமைக்கப்படுகிறது. திருவள்ளுவரைவிட, கருணாநிதி பெரியவரா என கேள்வி எழுப்பியதால், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சமூக செயற்பாட்டாளர் முகிலன் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக்கேட்பு கூட்ட மேடையிலேயே, போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை போலிசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். 

பேனா சிலை அமைக்க இன்று முடிவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஏற்கனவே அனுமதி அளித்தது. இந்தநிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு தனது இறுதி முடிவை இன்று எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஏற்கனவே சமர்பித்தநிலையில், பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கலாமா என்பதை இன்று முடிவெடுக்கிறது மத்திய சுற்றுச்சூழல்துறை நிபுணர்குழு.