Tamil News
Tamil News
Sunday, 16 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தது சிட்கோ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். 

2 குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக ஏழு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள்  குளிப்பதற்காக  நீரில் இறங்கி ஆற்றில் ஆழமான சேற்றில் சிக்கி உள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் புதை குழி பகுதியான சேற்றில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர். மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டதால் அருகில் உள்ளவர்கள் மற்ற ஐந்து மாணவர்களை  காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். 

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ஊத்துக்குளி போலீசார்  உயிரிழந்த இரண்டு பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் அறிவுறுத்தல்

 ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தது சிட்கோ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மனதை உளுக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்க செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் உயிரிழப்பு செய்திகளை காணும் போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.