Tamil News
Tamil News
Monday, 17 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தான் வகிக்கும் பதவி எப்போது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையோ, அப்போது பணியை முடித்துக் கொள்வேன் என்று தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தமிழ்நாடு சிறந்த இடம்

"என்னுடைய பணி அனுபவத்தில் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. நான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். தற்போது தமிழில் படிக்கிறேன். தமிழில் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். தமிழ்நாடு சிறந்த இடம். இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழியும், இலக்கியங்களும் மிகவும் பழமையானவை" என்று கடந்த ஜனவரி மாதம் ராஜ்பவனில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.

இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது

இதனையடுத்து, ஏப்ரல் 06-ம் தேதி சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது” என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

மகிழ்ச்சி தராவிட்டால் ராஜினாமா

இந்தநிலையில், "தான் வகிக்கும் பதவி எப்போது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையோ, அப்போது பணியை முடித்துக் கொள்வேன்" என ராமநாதபுரம் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக பேசியிருக்கிறார். தொடர்ந்து, மாணவர்களிடம் "இடர்பாடுகள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேறலாம் என்றும் நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால், வாழ்வில் ஒளிரலாம்" என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் மக்கள், தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசிவந்தநிலையில், தற்போது தான் வகிக்கும் பதவி மகிழ்ச்சி அளிக்காவிட்டால் ராஜினாமா செய்து கொள்வேன் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.