Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

முன்னாள் கர்நாடக முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது கர்நாடக பாஜகவில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி வருகின்ற 20ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. 24ம் தேதி வேட்புமனுக்களை திரும்பெற கடைசி நாள் ஆகும். இந்நிலையில், பாஜகவில் இருந்து பல தலைவர்கள் விலகி தற்போதைய எதிர்க்கட்சியான காங்கிரசில் இணைந்து வருகின்றனர். 

முன்னாள் முதலமைச்சர் விலகல்

கர்நாடக அரசியலில் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது அங்குள்ள லிங்காயத் சமூகம். அதனால் தால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பாஜக முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறக்கும். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் இதே சமூகத்தை சேர்ந்தவர். அதைப்போல கடந்த 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பாஜக முதலமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டரும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இந்நிலையில், எடியூரப்பா ஏற்கெனவே பாஜகவில் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். அதைப்போல ஜெகதீஷ் ஷெட்டரும் பாஜகவில் இந்த ஓரங்கட்டப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியான ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த 16ம் தேதி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவக்குமார் முன்னிலையில் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக ஜெகதீஷ் ஷெட்டரின் சொந்த தொகுதியான ஹூப்ளியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனந்த கண்ணீரில் ஜெகதீஷ் ஷெட்டரின் மனைவி

இந்நிலையில் நேற்று (18-04-2023)  பெங்களூருவில் இருந்து ஹூப்ளியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மலர்த்தூவி வரவேற்றனர். மேலும் அவரது மனைவி வீட்டின் வாசலுக்கு வந்து கண்ணீர் மல்க ஜெகதீஷ் ஷெட்டரை கட்டியணைத்து வரவேற்றார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு, ஜெகதீஷ் ஷெட்டரை நீண்ட நாட்களாக அவரது மனைவி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது, காங்கிரசில் அவர் இணைந்து இருப்பதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மட்டும் இல்லாது, அவரது மனைவி அதிக மகிழ்ச்சியில் உள்ளார். ஜெகதீஷ் ஷெட்டரை அவரது மனைவி ஆனந்த கண்ணீரில் கட்டியணைந்து வரவேற்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

காங்கிரசில் இணைந்த பாஜகவினர்


கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பாஜக தலைவர் எச்.டி.தம்மையா காங்கிரசில் இணைந்தார். பின்னர் சட்டமேலவை உறுப்பினர் புட்டன்னா, லெட்சுமணன் சாவடி, எஸ்.அங்காரா, எம்.பி.குமாரசாமி, ஆர்.சங்கர் மற்றும் தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பலர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.