Tamil News
Tamil News
Wednesday, 19 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ராகுல் மீது வழக்கு

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர் என்று பேசியிருந்தார். இதனடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்ற தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இத்னையடுத்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள பங்களாவை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

ராகுல் மனு தாக்கல்

இந்தநிலையில், அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும் தண்டனைக்கும் இடைக்கால தடைகோரி ராகுல் காந்தி சூரத்  மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ராகுல் காந்தி தரப்பில், இந்த விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும், ஒட்டுமொத்த வழக்கும் மின்னனு ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்ப்பட்டிருக்கிற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. 

மனு தள்ளுபடி

இதற்கு எதிர் தரப்பில், ராகுல் காந்தியின் பேச்சால் மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் புண்பட்டுள்ளனர் என்றும் இதுபோன்ற அவதூறு பேச்சுகளை ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, அவரது மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவத்தார். இந்தநிலையில், இன்று ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.