Tamil News
Tamil News
Wednesday, 19 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி 500 பேர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

பாஜகவினருக்கு இடமில்லை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எந்த கட்சியில் இருந்து விலகி விசிகவில் இணைந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வோம் ஆனால் பாஜகவில் இருந்து விலகி, விசிகவில் இணைய வேண்டுமானால் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என திருமாவளவன் பேசியிருந்தார். மேலும் ஒருமுறை இந்துத்துவா சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதே சிந்தனயோட்டத்தோடே இருப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதனால் பாஜகவில் இருந்து விலகி வருபவர்களை இப்பொழுது மட்டும் இல்லை எதிர்காலத்திலும் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியிருந்தார் திருமாவளவன். 

விதிவிலக்கு

இந்நிலையில் நேற்று கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் கிறிஸ்தவ போதகர்கள் இருவர் தலைமையில் சுமார் 500 பேர் பாஜகவில் இருந்து விலகி விசிகவில் இணைந்தனர். இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பிஜேபியிலிருந்து விலகி வரக் கூடியவர்களுக்கு விசிகவில் இடமில்லை என்பது ஏற்கனவே அறிவித்ததாகும். எனினும் இன்று பொள்ளாச்சியில்  கிறித்தவ போதகர்கள் இருவரை  இணைத்துக் கொண்டோம். மேடைக்கு வந்தோரை, குறிப்பாக- சிறுபான்மையினரை அரவணைப்பது எமது கடமையல்லவா? இந்த இணைப்பு விதிவிலக்கு ஆகும்” என தெரிவித்துள்ளார். 

பாஜகவை கடுமையாக எதிர்க்கும் விசிக

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்துத்துவாவிற்கும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கும் எதிராக விடுதலை சிறுத்தை கட்சி செயல்பட்டு வந்தாலும் 2014ம் ஆண்டிற்கு பிறகு அவர்களின் எதிர்ப்பில் வீரியம் கூடியிருக்கிறது. குறிப்பாக 2019ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்று, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புநிலை அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல காரணங்களால் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வரவேண்டும் குரலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து எழுப்பிவருகிறார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவையில் பாஜக

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட, கோவை மாவட்டத்தில் பாஜக ஓரளவு செல்வாக்கு மிக்கது. ஆனால் அங்கேயே 500 பேர் பாஜவிலிருந்து விலகி விசிகவில் இணைந்திருப்பது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.