Tamil News
Tamil News
Wednesday, 19 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  அந்நாட்டின் இராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டுப் போரில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட  இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது!

சூடானில் தங்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் தங்கியுள்ள அவர்கள், குழந்தைகளுக்கான உணவு கூட  கிடைக்காததால் ஒவ்வொரு நிமிடமும்  உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

சூடானின் 24  மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட தமிழர்கள் அதிகம் வாழும் உம்துர்மன் நகரம் மீது இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.  சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. அதனால் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்!

சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கும், இந்திய வெளியுறவுத் துறைக்கும் உண்டு. இனியும் தாமதிக்காமல்,  அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, சூடானில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.