Tamil News
Tamil News
Sunday, 23 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டை அடுத்து ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்து வருகின்றனர். 

அண்ணாமலை குற்றச்சாட்டு 

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க தலைவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு  ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அண்ணாமலை வெளியிட்ட இந்த திமுக ஃபைல்ஸ்  அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. 

அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு என திமுகவின் ஃபர்ஸ்ட் லைன் தலைவர்கள் தனித் தனியாக அண்ணாமலையைக் கண்டித்து நோட்டீஸ் அனுப்பி, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். திமுக தலைவர்கள் அனுப்பிய அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அண்ணாமலை 'மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியில் சந்திக்க தயார்' எனத் தெரிவித்திருந்தார்.

ஜி ஸ்கொயர் அறிக்கை

இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனம் அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், " ஜி ஸ்கொயர் நிறுவனம் தி.மு.க குடும்ப  உறுப்பினர்களுக்குச் சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனமோ அல்ல. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நிறுவனம் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத் துறையில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி முன்னணியில் இருக்கிறோம். ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல” என்று தெரிவித்துள்ளது. 

மேலும், “எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டது தவறான தகவல். நாங்கள் தவறான முறையில் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்பவைக்க ஜோடிக்கப்பட்ட பொய் தகவல். ஒரே சமயத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், அதிக வருமானம் ஈட்டியதாகவும் தவறான பல தகவல்களை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அவரின் தவறான குற்றச்சாட்டால் பல ஆண்டுகளாக எங்கள் உழைப்பால் பெறப்பட்ட வாடிக்கையாளரின் நம்பிக்கை சிதைந்திருக்கிறது. படித்த மரியாதைக்குரிய தலைவர் முன்வைக்கும் தவறான கருத்துகளையும் மக்கள் நம்பும் ஆபத்து இருக்கிறது" என ஜி ஸ்கொயர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

வருமான வரித்துறையினர் சோதனை!

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காத்திருந்து அதன்பிறகு சோதனையை தொடர்ந்தனர். இதுபோலவே கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ வீட்டிலும் சோதனை!

அதேபோல, சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவர்கள். நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் . திமுக கட்சியினர் தற்பொழுது மத்திய அரசுக்கு எதிராக முழுக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.