Tamil News
Tamil News
Sunday, 23 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆமை வேகத்தில் டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் அரசுத்துறை தேர்வுகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில ஆயிரம் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி போடுவதால் அதனை தாக்குபிடிக்க முடியாமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே திணறிப்போன காலங்கள் உண்டு. அரசுப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களைவிட போட்டியாளர்கள் அதிகம் தேர்வு எழுதுவதால், அதற்கான முடிவை வெளியிடுவதற்கான நடைமுறைகளை ஆமை வேகத்தில் செய்து வந்தது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம். 

நீண்ட நெடிய கனவு

தமிழ்நாட்டு இளைஞர்கள் எப்படியாவது அரசுத்துறையில் நுழைந்துவிட வேண்டும் என்கிற கனவில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தங்களுடைய உழைப்பை போட்டு எதிர்கால ஊதியத்தை பெருவதற்கு கடுமையாக போட்டி போட்டு வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் முடிவுகளை வெளியிடுவதற்கான காலம் நீண்டு கொண்டே போனது. இங்கு முடிவுகள் மட்டும் நீண்டு கொண்டு போகவில்லை, டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் எதிர்கால கனவும் நீண்டு கொண்டு போனது. 

ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

2021-ம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவை வெளியிட வலியுறுத்தி இணையத்தில் ஏற்பட்ட போராட்டத்தால், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்து முடிந்த தேர்விற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேர்வு முடிவை வெளியிட்டிருந்தது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம். தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி ட்விட்டரில் #WEWANTGROUP4RESULT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டான சம்பவம் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு தலைவலியாக அமைந்தது. 

டிஎன்பிஎஸ்சி விளக்கம்

இதற்கு, தேர்வாணையம் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்தது. அதில், இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்படுகிற தேர்வு. கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். டிஎன்பிஎஸ்சி OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகிறது என்று தெரிவித்தது.  

இனி கவலை வேண்டாம்

இப்படிப்பட்ட சூழலில் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் தான், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு ஒரு எளிய நடைமுறையை அறிவிப்பு செய்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அது என்னவென்றால், விடைத்தாள் திருத்தும் பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்களில் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

ஒரு நிமிடத்தில் 100-க்கும்  மேற்பட்ட ஓ.எம்.ஆர். தாள்களை திருத்த முடியும்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓ.எம்.ஆர். தாள்களை திருத்த முடியும் என்று தேர்வு மைய பயிற்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிதாக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த செயல்முறை எந்த விடைத்தாளை திருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அதாவது, முதல்நிலை தேர்வுகளுக்கா இல்லை இரண்டாம் நிலை தேர்வுகளுக்கா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், முதல்நிலை தேர்வுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேர்வு மைய பயிற்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.