Tamil News
Tamil News
Tuesday, 25 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பிடிஆரின் முதல் ஆடியோ

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மர்ம நபர் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்ற உரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.

பிடிஆரின் விளக்கம்

அந்த ஆடியோ தமிழ்நாடு முழுக்க பேசப்பட்டு சர்ச்சையை கிளப்பி திமுகவில் குட்டையை கிளப்பிய போதும், அந்த ஆடியோ பற்றி இரண்டு நாட்களுக்கு பிறகுதான் அமைச்சர் பிடிஆர் சர்ச்சை காணொளி தொடர்பாக விளக்கம் கொடுத்தார். பிடிஆரின் தாமதமான விளக்கத்தால் இந்த ஆடியோ உண்மையாகத்தான் இருக்கும் என்று பல பத்திரிக்கையாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

பிடிஆரின் இரண்டாவது ஆடியோ

பிடிஆர், அது என்னுடைய ஆடியோ இல்லை என்று விளக்கம் கொடுத்து பெருமூச்சு விட்டு நிறுத்தவதற்குள், நேற்றைய தினம்  பிடிஆருடைய மற்றொரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ திமுகவினர் மத்தியில் மேலும் குட்டையை குழப்பியது. 

அந்த ஆடியோவில். “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவாளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்து இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் இங்கு எல்லாம் முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். நிதி மேலாண்மை செய்வது சுலபம், இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள் என்று பிடிஆர் பேசியிருப்பதாக இரண்டாவது ஆடியோவை நேற்று அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு அரசியல் அனல் மேல் அனல் பறக்க ஆரம்பித்தது. 

இரண்டாவது ஆடியோவிற்கு பிடிஆர் விளக்கம்

முதல் ஆடியோவிற்கு விளக்கம் கொடுக்க தாமதமானதால், பல நெருக்கடி கருத்துக்களை சந்தித்த பிடிஆர், நேற்று வெளியான ஆடியோவிற்கு இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பக்கா எவிடென்சோட வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது; 

நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ க்ளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

திராவிட மாடலின் சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத சில சக்திகள், எங்களின் சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றிருக்கும் அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி தவறாகப்பேசுவேன்? திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை செயல்பட்டு வருபவர்களைப் பற்றி நான் ஏன் தவறாக பேச வேண்டும்? 

நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆசோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது இரண்டாவது ஆடியோவிற்கு நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்திருக்ககூடியநிலையில், தமிழ்நாடு அரசியல் களம் இனி எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.