Tamil News
Tamil News
Wednesday, 26 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதிமுக - பாஜக உரசல்

கடந்த காலமாகவே அதிமுக - பாஜக இடையே பனிப்போர் அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், இது அதிமுகவிற்கும் பாஜவிற்கும் ஏற்பட்ட பிரச்னை அல்ல, இது எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே இருக்கக்கூடிய பிரச்னை என்று ஒருசில பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்னை பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததிலிருந்தே இந்த பிரச்னையானது ஆரம்பித்தது என்றே பார்க்கலாம். 

அண்ணாமலை தடால்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி பற்றி பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாக உடைத்து பேசியதையெல்லாம் பார்த்தோம். அதிமுக - பாஜக கூட்டணியைத் தாண்டி இபிஎஸையும் கடுமையாக மறைமுகமாக சாடியிருந்தார். குறிப்பாக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பாஜக வளர்ந்து வருவதை விரும்பவில்லை என்றும் கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன் என்றும் பேசியிருந்தார். மேலும், தற்போது திமுக சொத்துப்பட்டியலை வெள்ளியிட்ட நிலையில், அதிமுகவின் சொத்துப்பட்டியலையும் வெளியிடுவேன் என்றும் பேசியிருந்தார். 

இபிஎஸ் பதிலடி

அண்ணாமலையின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுத்து வந்தார். மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை தேர்வு செய்வார்கள், மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும், அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசுவதற்கு மேலே பாஸ் இருக்காங்க, மேலே இருக்கும்போது கீழே இருப்பவர்களைப் பற்றி ஏன் கேக்குறீங்க. மாநிலத்தில் தலைவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அதனால், இங்கே இருக்கும் மாநில தலைவர்களிடம் பேசவில்லை என்று அண்ணாமலையை ஒரு பொருட்டாக மதிக்காமலே பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. 

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு

இந்தநிலையில், நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், கட்சிக்கு துரோகம் செய்த யாருக்கும் அதிமுகவில் இடம் இல்லை என்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பேசினார்.

என்ன சொன்னார் 

இறுதியாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று இபிஎஸ் தெரிவித்தது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நேற்று வரைக்கும் அதிமுக பாஜக, இபிஎஸ் அண்ணாமலை என மோதிக்கொண்டிருந்தநிலையில், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சந்திப்பிற்கு பிறகு அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என இபிஎஸ் அறிவித்திருப்பது, இபிஎஸிற்கு மேலிடம் அண்ணாமலையுடன் இணைந்து செல்லுங்கள் என்ற கட்டளையை விடுத்திருக்குமா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.