Tamil News
Tamil News
Wednesday, 26 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பட்டறையில் நகை  திருட்டு

திருச்சியில் ஜோசப் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் மர்ம நபர்கள் புகுந்து ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.  இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட பரணிக்குமார், சரவணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகைகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.  

சிறப்பாக பணியாற்றிய தனிப்படை

இந்த வழக்கு தொடர்பாக இன்று கோட்டை காவல் நிலையத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது. கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் ஏற்கனவே 18 வழக்குகளில் தொடர்புடையவர்கள். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படையினர் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில் இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நபர்களிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரை பொறுத்தவரை இந்த வருடத்தில் மட்டும் கொலை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர்ந்து கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதே போல் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.