Tamil News
Tamil News
Friday, 28 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

உயிரிழந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாயாருக்கு உரிமை உள்ளது என்றுகூறி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  

மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை சரஸ்வதி தம்பதிகள் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2005-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தனக்கு ஜீவனாம்ச தொகை வழங்க வேண்டும் என்று சரஸ்வதி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுராந்தகம் நீதிமன்றம் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தனக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான 6,22,500 ரூபாயை வழங்கக்கோரி மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே அவர் உயிரிழந்து விட்டார். தன்னுடைய மகள் தொடர்ந்த வழக்கில், தான் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவருடைய தாயாரான ஜெயா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். 

மனைவி தொடுத்திருந்த வழக்கில் தாயாரை சேர்த்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாதுரை மேல்முறையீடு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்தில் உரிமை முதலில் பிள்ளைகளுக்கும் அடுத்தபடியாக கணவருக்கும், அதற்குபிறகு அவரது தாயாருக்கு செல்லும் என்று வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையைப் பெற தாயாருக்கு உரிமை உள்ளது என்று கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலு, மகள் தொடர்ந்த வழக்கில் தாயாரை சேர்த்தது எந்தவித தவறும் இல்லை என்று கூறி, அண்ணாதுரை தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.