Tamil News
Tamil News
Tuesday, 02 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஜி ஸ்கொயர் சோதனை நிறைவு

ஜி ஸ்கொயர் தொடர்புடைய நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் கடந்த எட்டு நாட்களாக நடத்திய சோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சென்னையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள பதிவு அலுவலகம் உட்பட தமிழகம் முழுதும் உள்ள 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி துவங்கிய சோதனை மே 1-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஜி ஸ்கொயர் விளக்கம்

கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டு வந்தநிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டதாக ஆவணங்களோ, பணம் கைப்பற்றப்பட்டதாக விளக்கமோ தற்போது வரை வருமான வரித்துறை அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 

எதுவும் கைப்பற்றவில்லை

அதில், வருமான வரித்துறை சோதனையில் ரூபாய்.3.5 கோடி கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரொக்கம் எதுவும் கைப்பற்றவில்லை என்பதை வருமான வரித்துறையினரிடமே உறுதி செய்து கொள்ளலாம் என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை

இந்த சோதனை வருமான வரித்துறையினரின் வழக்கமான நடவடிக்கைதான் எனவும், எங்கள் மீதான குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை, தவறான வழிகாட்டுபவை என்றும் ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த ஒரு வார காலமாக எங்கள் நிறுவனங்களில் நடந்த சோதனையில் எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியது என்றும் விளக்கமளித்துள்ளது. 

அரசியல் கட்சிகளுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை

மேலும், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ரூ.38,000 கோடி நிகர வருமானம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு அது அடிப்படை ஆதாரமற்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்த வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் அரசியல் கட்சியினருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்பது  உறுதியாகியுள்ளது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.