Tamil News
Tamil News
Wednesday, 03 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

திராவிட மாடல் கொள்கை ஒரே நாடு, ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது பேசி வரும் கருத்துக்களால் தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்து வந்தது. அந்தவகையில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து நேற்றைய தினம் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசியதாவது, "திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி.  திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது" என்று விமர்சித்துள்ளார்.

நிதியமைச்சர் கூறுவது பொய்

அடுத்தபடியாக, ஆளுநர் மாளிகையின் நிதி செலவினங்களில் விதிமீறல் நடந்திருப்பதாக அண்மையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். "நிதியமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், நான் அதிகாரத்தை மீறுகிறேன் என கூறுவது தவறான பரப்புரை" என்றும் தெரிவித்தார். 

மசோதாவை நிறுத்தி வைத்துள்ளேன்

மேலும், சித்தா பல்கலைக்கழக மசோதா தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. இரண்டு முறை தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாவில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. "இது பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக கூறி அதை நிறுத்தி வைத்துள்ளேன்" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.  

ஸ்டாலின்  சிறந்த மனிதர்

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி பேசிய ஆளுநர், "முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு மதிப்புள்ளது என்றும், அவர் சிறந்த மனிதர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நான் அவரிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறேன். அதேபோல் அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார். தனிப்பட்ட முறையில், எங்களுக்கு இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது" என்று கூறினார்.