Tamil News
Tamil News
Thursday, 04 May 2023 00:00 am
Tamil News

Tamil News

பிரதமர் மோடியை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்டலருடன் ஒப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிரகாஷ் ராஜ் அரசியல்

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். மேலும் கௌரி லங்கேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் தொடர்ந்து அவர் குரல் கொடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கௌரி லங்கேஷின் மரணத்திற்கு இந்துத்துவவாதிகளும் பாஜகவுமே காரணம் என பிரகாஷ்ராஜ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். மேலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் நின்று 28,906 வாக்குகளைப்பெற்றார். 

கௌரி லங்கேஷுடன் நட்பு

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கௌரி லங்கேஷின் பக்கத்து வீட்டுக்காரர். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். அதனால் தான் கௌரி லங்கேஷின் மரணம் அவரை கடுமையாக பாதித்தது. 

மோடி மீது விமர்சனம்

எழுத்தாளர் கௌரிலங்கேஷின் மரணத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடியையும், பாஜகவையும் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திர ராஜன் முன்னிலையில் பிரதமர் மோடி ஒரு மாடல் எனவும் அவரது மேல் மாடி காலியாக உள்ளது எனவும் கடுமையாக விமர்சித்தார். இதைப்போல தொடர்ந்து பலாமுறை மோடி குறித்து பிரகாஷ் ராஜ் பல விமர்சனங்களை வைத்துள்ளார். 

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் என மும்முனைப்போட்டி நிலவிவருகிறது. ஆனாலும் பாஜக - காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி கடுமையாக உள்ளது. கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தாலும், அதனை முழுமையாக தக்கவைக்க முடியவில்லை. 

இந்த தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலர் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனர். அதைப்போல இந்தமுறை பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் மூலம் கருத்து தெரிவித்துவருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி குழந்தைககளை சந்திக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தில் குழந்தை முள்வேலிக்கு அந்த புறம் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மோடி முள் வேலிக்கு இந்த பக்கம் நின்று குழந்தைகளுக்கு கை காண்பிக்கிறார். குழந்தைகள் மோடியுடன் கைக்குலுக்க முயன்றும் மோடி அவர்களை நோக்கி கை அசைக்க மட்டுமே செய்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் ராகுல் காந்தி குழந்தகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து மோடியை விமர்சனம் செய்து இருந்தனர். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ், ஹிட்லர் குழந்தைகளை முள் வேலிக்கு அந்த புறம் நிற்க வைத்து எடுத்த புகைப்படத்தையும், மோடியின் புகைப்படத்தையும் பகிர்ந்து “வரலாறு திரும்புகிறது, முள்வேலிக்கு பின்னாலேயே எதிர்காலம் உள்ளது, ஜாக்கிரதையாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

பிரகாஷ்ராஜின் இந்த பதிவிற்கு பாஜக, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் மதசார்பின்மையை விரும்பும் மக்கள் பிரகாஷ்ராஜின் கருத்தை வரவேற்று பதிவிட்டுள்ளனர்.