Tamil News
Tamil News
Wednesday, 03 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

விதிகளை மீறி  தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகம் செய்து, மீண்டும், மீண்டும்  பெரியார் பல்கலைக்கழகம் இழிவுபடுத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), எம்.டெக் (எரிசக்தி தொழில்நுட்பம்) ஆகிய  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த 28.04.2023-ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த இரு படிப்புகளையும் நடத்துவதற்கு  பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உரிமையும், அதிகாரம் இல்லை. இப்படிப்புகளுக்கான  பெரியார் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை அறிவிப்பு விதிகளுக்கு முரணானது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக  நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு விதிகளை மீறியது என்று  ஏப்ரல் 15-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது குறித்து ஏப்ரல் 18-ஆம் நாள் சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய வினாவுக்கு விடையளித்த உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி அவர்கள்,’’பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை. அந்தப் படிப்பை நிறுத்தும்படி ஆணையிட்டிருக்கிறேன். எம்.டெக் படிப்பையும் நிறுத்த ஆணையிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால், அமைச்சரின் ஆணையை பொருட்படுத்தாமல் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை பி.எஸ்சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற பெயரில் அதே தனியார் நிறுவனம் மூலம் நடத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகம். பி.எஸ்சி படிப்பை பல்கலைக்கழகம் நடத்த முடியாது என்பது விதி. விதியை மீறித் தான் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதேபோல் எம்.டெக் படிப்பை நிறுத்த அமைச்சர் ஆணையிட்டும், அந்தப் படிப்பை நடத்த பல்கலைக்கழகம் மீண்டும் விளம்பரம் வெளியிட்டுள்ளது.  உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆணைக்கு  பெரியார் பல்கலைக்கழகம் அளிக்கும் மரியாதை இது தானா?  இணைவேந்தரான அமைச்சரை விட உயர்ந்தவரா துணை வேந்தர்?

தமிழ்நாடு அரசை பெரியார் பல்கலைக்கழகம் இழிவுபடுத்தும் இது முதல் முறையல்ல.  அரசால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவரையே பொறுப்பு பதிவாளராக அமர்த்தி  அரசை இழிவுபடுத்தியவர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்.  இதே நிலை இனியும் தொடர அரசு அனுமதிக்கக்கூடாது.  அரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.