Tamil News
Tamil News
Thursday, 04 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

"தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தநிலையில், உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. 

"தி கேரளா ஸ்டோரி" ட்ரெய்லர்

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.  

உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு 

படத்தின் ட்ரெய்லர் வெளியானதையடுத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படமானது இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரசாரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று படத்தின் கதை களம் இருப்பதாகவும், அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து, கேரளா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.  

கேரள உயர்நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு 

இதனையடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். விசாரணையில், மனுதாரர்கள் கூட இன்னும் படத்தை பார்க்கவில்லை எனும்போது எப்படி தடை செய்ய உத்தரவிட முடியும். மேலும், தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் அளித்துள்ளது என்று தெரிவித்தனர்.  

இஸ்லாமுக்கு எதிராக எதுவும் இல்லை
 
இந்தப் படம் கற்பனையே தவிர வரலாறு அல்ல என்றும், கேரளத்தைப் போன்ற மதச்சார்பற்ற சமூகம் இந்த படத்தை ஏற்றுக்கொள்ளும். படத்தை திரையிடுவதால் கேரளத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், இந்தப் படத்தில் இஸ்லாமுக்கு எதிராக எதுவும் இல்லை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு எதிராகத்தான் இருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படம் இன்று வெளியாவதையடுத்து, கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் வெளியாக உள்ள தியேட்டர்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.