Tamil News
Tamil News
Friday, 05 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, "ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி" என்ற சாதனை மலரை வெளியிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு பல்வேறு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

வருவாய்த் துறை சார்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பலன்கள் மற்றும் புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த தொடங்கினார். 

"ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல சோதனைகளைச் சந்தித்துக் கொண்டு அரசியலில் இருக்கிறேன். அண்ணா, ‘எதையும் தாங்க வேண்டும்’ என்றார். தலைவர் கலைஞர், ‘இதையும் தாங்கிப் பழகு’ என எனக்கு கற்றுக்கொடுத்தார். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்காக ஓய்வின்றி, சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். உழைப்புக்கான பலனை உங்கள் முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பணியை சிறப்பாக செயலாற்றுகிறேன்.  

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என திருக்குறள் சொல்கிறது. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என சொல்வது திராவிட மாடல். மக்களை சாதி, மதம், அதிகாரத்தால் ஆணவத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியும். திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மகிழ்ச்சியும் புன்னகையும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. 

இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் பெரும்பாலான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று கூட புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை கிடைத்துள்ளது. பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என அனைவருக்கும் பலன் அளிக்கும் விதமாக அரசு செயல்பட்டு வருகிறது. 

கீழ் நிலையில் உள்ள மக்களை கை தூக்கிவிடுகிற அரசுதான் எங்களது அரசு. இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகார முகம் அல்ல அன்பு முகம்; ஆணவ முகம் அல்ல ஜனநாயக முகம்; அலங்கார முகம் இல்லை எளிமை முகம்; சர்வாதிகார முகம் அல்ல சமத்துவ முகம்; சனாதன முகம் அல்ல சமூக நீதி முகம். அதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது.

முகச் சிதைவால் பாதிக்கப்பட்ட டானியா சிகிச்சை பெற்று தற்போது பள்ளி செல்கிறார். புதிய முதலீடுகள் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது. கோட்டையில் தீட்டப்படும் திட்டங்களை "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம் மூலம் ஆராய்ந்து வருகிறேன். ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்.