Tamil News
Tamil News
Friday, 05 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதற்கான  தேர்தல் முன்னேற்பாடு பணிகளை திமுக இப்போதே தொடங்கி விட்டது.   அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  காந்தி மார்க்கெட் அருகே உள்ள  ஒரு திருமண மண்டபத்தில் இன்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கே. என். நேரு கலந்து கொண்டு பேசுகையில் 

அனைவரையும் அரவணைக்கும் முதல்வர்

செயல்வீரர் கூட்டம் நடைபெறும் திருச்சி கிழக்கு தொகுதி திமுகவின் கோட்டை.  எம்.ஜிஆர். கட்சி தொடங்கி முதன் முதலில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 1977லேயே திருச்சி கிழக்கில் திமுக தான் வெற்றி பெற்றது.  மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. ஆனாலும் தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்தை கூட்டி உள்ளனர். நமது கூட்டணியை அப்படியே முதல்வர் அரவணைத்து கொண்டு செல்கிறார். இன்னும் கூடுதலாக நமது கூட்டணியில் எஸ்.டிபிஐ கட்சியும் சேரலாம்.   அதிமுக பாஜக ஒரு கூட்டணியாக நிற்கும்.  அவர்கள்(பாஜக) குறித்து வைத்துள்ள தொகுதியில் திருச்சியும் இருக்கிறதாக கேள்விபட்டேன். அவர்கள் அதிக அளவு பணத்தை செலவழிக்க திட்டமிட்டு உள்ளனர். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

அரசியல்வாதி போல கவர்னர்

கடந்த தேர்தலில் திருச்சி  தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். இப்போது அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.  கவர்னர் அரசியல் வாதிபோல பேசுகிறார்.  10 ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தை  கட்சி பணிக்கு  நமது தோழர்கள் செலவிட்டனர்.   நம்மை கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.  அதனால் தான் நமது முதல்வர் எதையும் சட்டப்படி, நியாயப்படி செய்கிறார்.

திருச்சி மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி 

மக்களவை தேர்தலில்  எள்முனையளவும் உற்சாகம் குறையாமல் பணியாற்றுங்கள் . நம்பிக்கையோடு செயல்படுங்கள்.மீண்டும் நாம் வெற்றிபெறுவோம்.  நமது தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார்.  2 ஆண்டு திமுக ஆட்சியில் திருச்சி மாநகரத்திற்கு மட்டும் முதல்வர் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கி  உள்ளார்.  திருச்சி மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர உள்ளது.  திருச்சி காந்தி மார்க்கெட்  பகுதி தரம் உயர்த்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  

இந்தியாவிலேயே திமுக தான்......

தொடர்ந்து சிறப்புரையாற்றிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : தமிழகம் முழுவதும் சென்று திமுகவினர் எப்படி செயல்படுகின்றனர் – கழகத்திற்காக எப்படி உழைக்கின்றனர் என்பதனை பார்ப்பதற்கு அரிய வாய்ப்பாக இந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை எனக்கு வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து தமிழகத்தில் முதல்முறையாக செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான். செயல் வீரர்களாக இருக்கக்கூடிய நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளார்கள் பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற மொத்த விபர பட்டியலை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். 55 ஆண்டு பொது வாழ்வில் இருக்கக்கூடிய ஒரு தலைவரை தலைமையாகக் கொண்ட இயக்கம் எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே திமுக தான்.

ராஜராஜ சோழனை போல..

முதலமைச்சர் என்கிற மிகப்பெரிய பொறுப்பு இருந்தாலும் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் என்பதையே நம் முதல்வர் பெருமிதம் கொள்கிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களும் நாம் வெற்றி பெற இருக்கிறோம். பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை பெற்றார் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் ராஜராஜ சோழன் அதேபோல் 40க்கு 39 இடங்களை பெற்று தந்தார் நம்மளுடைய முதலமைச்சர் ராஜேந்திர சோழன் ஆனால் மீண்டும் ராஜராஜ சோழனை போல் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகவே மாற உள்ளார் நமது முதலமைச்சர்.

எதிரிகளை ஓட ஓட விரட்டும் ஒரே இயக்கம் 

கட்சி தேர்தல் என்றால் இரண்டு அணிகளாகவும் பொது தேர்தல் என்றால் ஒரணியாகவும் திரண்டு எதிரிகளை ஓட ஓட விரட்டும் ஒரே இயக்கம் திமுக தான்.
40க்கு 40 வெற்றி பெறுவதற்காக நாம் கடுமையாக உழைத்து முழுமையான வெற்றியை தேடி தந்தால் மட்டுமே நமது தலைவருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும் என பேசினார் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன்,  பழனியாண்டி, துணை மேயர்  திவ்யா,  முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.