Tamil News
Tamil News
Friday, 05 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆளுநர் குற்றச்சாட்டு 

அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பழிவாங்கும் வகையில் சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால், அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை என்றும் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தடை செய்யப்பட்ட இரண்டு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

இதனால், அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு, தான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாகவும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் ஆளுநரின் பேட்டி அடிப்படையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதுபற்றி விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

டிஜிபி விளக்கம்

இந்தநிலையில், நேற்றைய தினம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை மூலமாக விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், இரு விரல் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைபடி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். ஆனால் அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். 

தீட்சிதர்கள் என்றால் சட்டம் பாயக்கூடாதா?

இதனையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரை கேள்வி எழுப்பியுள்ளார். "இரட்டை விரல் பரிசோதனை எங்கும் நடைபெற்றதாக எந்தக்குறிப்பும் இல்லை. சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனை கூட முழுவதும் பெண் மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று டிஜிபி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆளுநரை நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான், சட்டமீறல் விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அந்த சட்டம் அவர்கள் மீது பாயக்கூடாதா? சிதம்பரம் தீட்சிதர்களுக்கென்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்து கொடுத்திருக்கிறாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று பேசியிருக்கிறார்.