Tamil News
Tamil News
Sunday, 07 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பெயர் முதலில் சேர்க்கப்பட்டு தற்போது நீக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. 

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை கலைவாணர் அரங்கில் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.   

பேச்சாளர்கள் பட்டியல்

திமுகவின் 2 ஆண்டு சாதனைகளை விளக்க 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அதற்கான பட்டியலை முரசொலி நாளிதழில் கடந்த மே 3-ம் தேதி வெளியிட்டது திமுக. 

அதில், மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் வ.து.ந.ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ந.ரகுபதி, சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு ச.முத்துசாமி, ஜீவா நகர் பகுதியில் ப.ஆ.சரவணன், பெத்தாணியபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை ராமர் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

பிடிஆர் பெயர் நீக்கம்

இந்தநிலையில், சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. முதலில் வெளியான பட்டியலில் மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதி பட்டியலில் பிடிஆர் பெயர் இருந்தது. தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிடிஆர் ஆடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிஆர் ஆடியோ ஒன்று வெளியாகி திமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அது என்னுடைய ஆடியோ இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். விளக்கம் ஒன்றை அளித்தார். இதனையடுத்து, நிதியமைச்சர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார். அதனையடுத்து, உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களும் பதில் அளித்திருந்தார். 

பிடிஆரை ஓரம்கட்டுகிறதா திமுக

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அநேக ஆருடங்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் அமைச்சரவை பதவி மாற்றப்படும் என்று யூகித்தனர். ஏற்கனவே நிதியமைச்சர் திமுகவில் ஓரம்கட்டப்படுவதாக பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்ட பி.டி.ஆரின் பெயர் தற்போது பெயர் நீக்கப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட காரணங்களால் திமுக அரசு அவரை கட்சியில் இருந்து ஓரம்கட்டுகிறதா என்றே பார்க்க முடிகிறது.