Tamil News
Tamil News
Wednesday, 10 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

விறுவிறுப்பாக நடந்து வரும் ஐபிஎல் திருவிழா

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் கூட ஒவ்வொரு அணிகளும் நெருங்கிய புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று நடக்க உள்ள ஐபிஎல்-ன் 56 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும்,  ராஜஸ்தான் ராயல்ஸும் மோத உள்ளன. 

தொடர் தோல்விக்கு முற்று புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?

புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக கருத்தப்பட்ட ராஜஸ்தான் தற்போது தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. அந்த அணியில் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.  கடையாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 214 ரன்கள் குவித்தது. இருந்தபோதிலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால், பட்லர்,  கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறுகின்றனர். அதேபோல ,பந்துவீச்சில் சாஹல் தவிர மற்ற வீரர்களின் பந்து மோசமான நிலையிலேயே உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் கொல்கத்தா!

கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணி கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஃபார்முக்கு திரும்பியுள்ளது. கடைசியாக பஞ்சாபிற்கு எதிரான போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, ஜேசன் ராய்,  ரஸ்ஸெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற வீரர்களும் அவ்வபோது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றி முக்கிய பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக தனி நபரை மட்டும் நம்பாமல், அந்த அணி கூட்டு முயற்சியாக விளையாடி வருவது கொல்கத்தா அணியில் பலமாக பார்க்கப்படுகிறது. கடைசி இரு போட்டியில் வெற்றி பெற்று அதே நம்பிக்கையுடன் ஹாட்ரிக் வெற்றி பெற கொல்கத்தா தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் இப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதால் அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.