Tamil News
Tamil News
Monday, 15 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மதுவுக்கு எதிரான அவர்களின் உணர்வு மதிக்கத்தக்கது

"சென்னையை அடுத்த  ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.  மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கோபம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இதுவாகும். பெண்கள் கடைபிடித்த வழிமுறை வேண்டுமானால் சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், மதுவுக்கு எதிரான அவர்களின் உணர்வு மதிக்கத்தக்கது. அவர்களின் போராட்ட உணர்வை நான் பாராட்டுகிறேன்.

பொங்கி எழுந்த பெண்கள்

காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மற்றும் குடிப்பகத்தால் அப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.  அங்கு மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி  விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவ, மாணவியரிடம் தவறாக நடப்பதும் வாடிக்கையானதாகி விட்டன. இதை சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்

மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது இது முதல்முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் சிவகங்கை மாவட்டம், அகிலாண்டபுரத்தில் உள்ள  மதுக்கடையில் மது அருந்திவிட்டு சிலர் தாறுமாறாக ஓட்டிய வாகனம் மோதி அப்பகுதியைச் சேர்ந்த  ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் திரண்டு சென்று அகிலாண்டபுரம் மதுக்கடையை சூறையாடினர். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தால் அது சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறும் ஆபத்து உள்ளது. அதற்கு எந்த வகையிலும் தமிழக அரசு இடம் கொடுத்து விடக் கூடாது. காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.