Tamil News
Tamil News
Wednesday, 17 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு

2017-ம் ஆண்டு மெரினா புரட்சிக்குப் பிறகு தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது. அந்த சிறப்பு சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் போன்றவைகளுக்கு தடை விதிக்கக்கோரியும், பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

வாதப்பிரதிவாதங்கள் 

ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய தமிழக விளையாட்டு என்றும், விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கிழைக்க கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என்று பீட்டா தரப்பில் வாதிடப்பட்டது. வாதப்பிரதிவாதங்களை கேட்டநிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தநிலையில், தற்போது அதிரடியான ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. 

அதிரடி தீர்ப்பு

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த தீர்ப்பானது வாசிக்கப்பட்டது. மனிதர்களுக்கு உள்ள சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தெரிவித்தார். கடிக்கும் கொசுவை அடித்துவிட்டால், விலங்குகள் வதை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டனர்.

இறுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு கலாச்சாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.