Tamil News
Tamil News
Sunday, 21 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே.பி. அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கே.பி. அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தனர். 

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என வழக்கு

இந்தநிலையில், கே.பி.அன்ழகன் 2016 முதல் 2021 வரையில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலிசார் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மருமகள் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அன்பழகன் மற்றும் உறவினர் பெயரில் ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலிசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வழக்கு தொடுத்த கிருஷ்ணமூர்த்தி, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 

10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தது. அதில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டுமென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இன்று கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் 10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

விஜயபாஸ்கர் மீது 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அடுத்ததாக, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்திருப்பதாக ஏற்கனவே அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

அதேபோல், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இந்தநிலையில், ஏற்கனவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.