Tamil News
Tamil News
Wednesday, 24 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

புதிய நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த 19 எதிர்க்கட்சிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் 13 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  

ராகுல் காந்தி கேள்வி

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் புதிய நாடாளுமன்ற கட்டித்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும், பிரதமர் ஏன் திறக்கிறார்" என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இதையடுத்து, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஏனென்றால், 19 எதிர்க்கட்சிகள் எனும்போது, இரு அவைகளின் பெரும்பகுதியாக இவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, திமுகவை பொறுத்தவரை அதிக எம்.பி-க்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய ஜனநாயக கூட்டணி கண்டனம்

இந்தநிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் செயல் ஜனநாயக அமைப்பை அவமதிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 13 கட்சிகள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். 

தேசிய ஜனநாயக கூட்டணியிலான ஜே.பி.நட்டா, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், ஹரியான துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, தமிழ்நாட்டிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 13 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அரசியல் ஆதாயத்தை தேடக்கூடாது

மூன்று பக்கங்களாக வந்துள்ள இந்த அறிக்கையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்வதாகவும், குடியரசுத் தலைவரை பல தருணங்களில் விமர்சனம் செய்துவிட்டு, தற்போது அரசியலுக்காக திரெளபதி முர்முவை ஆதரித்து பேசுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது அவமரியாதையான செயல் மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் முக்கியத்துவங்களை மறுதலிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகிறது இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூட்டறிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் தேசிய நலனை சிந்தித்து பார்க்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட அரசியல் ஆதாயத்தை தேடக்கூடாது எனவும் விமர்சனம் செய்துள்ளனர்.