Tamil News
Tamil News
Wednesday, 24 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ் வழிக்கல்வி ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். 
 
பொறியியல் படிப்புகளில் தமிழ் வழியிலும் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில  பாடப்பிரிவுகளில் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன. இதனையடுத்து, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்

தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. என்றாலும், மாணவர்கள் மத்தியில் தமிழ் வழியில் பயில்வதற்கான போதிய ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுகிறது, மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.

அதன்படி, ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், இராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட 11 இடங்களில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில் நடத்தப்பட்டு வந்த தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்திருந்தது.

வரக்கூடிய கல்வியாண்டில், மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நடத்தப்படாது என்றும், மேலும், 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  

வாபஸ்

இந்தநிலையில், தற்போது தமிழ் வழிக்கல்வி ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதில், "தமிழ் வழியில் படிப்பதற்கு ஆர்வம் இல்லாத காரணத்தால் பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 10-க்கும் குறைவான மாணவர்களே தமிழ் வழிக்கல்வியை தேர்வு செய்தனர். தமிழ் வழி பாடப்பிரிவுகள் ரத்து என்பது தவறான செய்தி, 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் மெக்கானிக்கல், சிவில் பாடங்கள்  ரத்து என்ற அறிவிப்பை திரும்பப் பெறுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.