Tamil News
Tamil News
Wednesday, 24 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

 65 ஆயிரம் ச.மீ பரப்பளவில் அமைய உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 

டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு 2 வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி,  சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அதற்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைந்து உள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

பிரதமர் திறக்க எதிர்ப்பு

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும். எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் மட்டுமே திறந்து வைக்கப்பட வேண்டும். பிரதமரால் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.  

மத்திய அரசுக்கு எதிராக திரண்ட எதிர்கட்சிகள்

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொது செயலாளர் உத்பல் குமார் சிங், இந்த அழைப்பிதழை எம்.பி.க்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசை சாடினார். இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி. ராஜா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுப்பு

எனினும், இதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், குடியரசு தலைவர் நாட்டின் தலைவராக இருக்கிறார். அரசின் தலைவராக பிரதமர் இருக்கிறார். அரசு சார்பாக நாடாளுமன்ற நிகழ்வை வழிநடத்தி செல்கிறார். குடியரசு தலைவர் இரு அவையிலும் உறுப்பினராக இல்லை. ஆனால், பிரதமர் உறுப்பினராக இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கும் முடிவில் உள்ளன. இந்த முடிவை திரும்ப பெறும்படி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டு கொண்டார். ஆனால், அதற்கு எதிர்க்கட்சிகள் உடன்படவில்லை. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாட்டின் குடியரசு தலைவரால் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இதன் விசாரணையை உச்சநீதிமன்றம் விரைவில் தொடங்க உள்ளது.