Tamil News
Tamil News
Thursday, 25 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கருவேல மரங்களுக்கு பரவிய தீ

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள், மற்றும் பல்வேறு கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வந்த தெர்மக்கோல் பெட்டிகள், அட்டைப்பெட்டிகள், நெகிழிப்பொருட்கள் என மார்க்கெட் வளாகத்தில் சேர்ந்த குப்பைகள் அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகமாக குவிந்ததையடுத்து, அவற்றை அங்கேயே தீ வைத்து எரித்து அழிக்கும் முயற்சியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில், காய்ந்துபோன கருவேல முள் மரங்கள், மற்றும் செடி, கொடிகளிலும் தீ பற்றி எரிந்தது.

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள் 

சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் யாரும் எதிர்பாராத வகையில், தீ மள மளவென கொளுந்து விட்டு சுமார் 30 அடி உயரத்துக்கு எரியத் தொடங்கியது. நெகிழிப்பொருட்கள், மற்றும் தெர்மக்கோல் பெட்டிகளும் எரிந்ததால் கரும்புகை கிளம்பியது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை 

தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில், குமரவேல் உள்ளிட்ட குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். தீயணைப்பு துறையினரின் துரிதமாக செயல்பாட்டால். அருகிலிருந்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.