Tamil News
Tamil News
Thursday, 25 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்பட்டு வந்த கள்ளச்சாராய உயிரிழப்பு, மது குடித்து உயிரிழப்பு போன்ற சம்பவங்களால் மக்கள் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

அதில், மதுபான விற்பனை உரிமம் தொடர்பான நிபந்தனைகளை கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள் பின்பற்றுகின்றனவா? என கேள்வி எழுப்பி, இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

டாஸ்மாக், மதுக்கூடங்கள் 10 மணிக்கு மூடப்பட வேண்டும்

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வாணிபக் கழகத்தின் மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று கலந்துரையாடினார். அதில் முக்கியமான அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

"டாஸ்மாக், மதுக்கூடங்கள் திறப்பில் எந்தவித விதிமீறல்கள் இருக்கக்கூடாதென தெளிவாக அறிவுறுத்தியும், டாஸ்மாக், மதுக்கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் எனவும்" அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

மேலும்,"அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்.பி. மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார். டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை ஊழியரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்" என்றும் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.

"சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.