Tamil News
Tamil News
Friday, 26 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

இறுதி கட்டத்தை எட்டிய ஐபிஎல் 

கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பொற்ற 16 வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று அனைத்தும் முடிவடைந்த நிலையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது விதி. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், முதலாவது தகுதிசு சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

 இதனையடுத்து ஐபிஎல் விதிமுறை படி, முதல் தகுதி சுற்றில் தோற்ற அணியான குஜாராத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியான மும்பையும் மோதியதில் குஜராத் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணியும் அகமதாபாத்தில் நாளை மோதுகின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் 

பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சென்னை அணியானது இந்த ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது அனைத்து ஐபிஎல் தொடரிலும் மஞ்சள் படையுடன் நட்சத்திர அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் இதே குஜராத் அணியை எதிர் கொண்ட சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. கடைசியாக நடந்த தகுதி சுற்றில் குஜராத்தை வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டது. சென்னை அணியை பொறுத்தவரை கேப்டன் தோனியின் தலைமையை பெரிதும் நம்பியுள்ளது. அவரின் வியூகங்களும் அணிக்கு பலனை கொடுத்து வருகிறது.

ஒவ்வொரு ஆட்டத்தில் ஒவ்வொரு வீரர் அணியை காப்பாற்றுவது சென்னையின் சிறப்பம்சமாகும். கூட்டு முயற்சியாக விளையாடும் சென்னை அணியில் உள்ள ருதுராஜ், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன. அதேபோல் பந்து வீச்சிலும், பதிரானா, ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் ஆகியோரும் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

எனவே இந்த போட்டியில் சென்னை அணி முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சென்னை அணி, மும்பையின் சாதனையை சமன் செய்யவும், 5 வது முறையாக கோப்பையை வெல்லவும் தீவிரம் காட்டி வருகிறது. கடைசியாக சென்னை அணி 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அசுர பலத்துடன் உள்ள குஜராத்

இந்த தொடரில் தொடக்கம் முதலே ஆதீக்கம் செலுத்தும் அணியாக குஜராத் அணி உள்ளது. லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடைசியாக நடந்த 2 வது தகுதிச் சுற்றில் முன்னாள் சாம்பியனான மும்பையை பந்தாடியது.

குஜராத் அணியில், பேட்ஸ்மேன் சுப்மன் கில் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடைசியாக மும்பைக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி, 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் நிற தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார். டேவிட் மில்லர், சுதர்சன் ஆகியோரும் பேட்டிங்கள் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை, ரஷீத்கான், மோஹித் ஷர்மா, ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ந்து 2 வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. 

தோனிக்காக கோப்பை வெல்லுமா?

இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தல தோனி அடுத்த வருடம் ஐபிஎல் ஆடுவாரா? என்ற சந்தேகம் இருப்பதாலும், இந்த போட்டியே கடைசியாக இருக்கும் என்பதாலும்,  அவருக்காக கோப்பை வெல்ல சக வீரர்களும், சென்னை ரசிகர்களும் ஆர்வமுடன் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர். ஐபிஎல் இறுதிப் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாதில் தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.