Tamil News
Tamil News
Sunday, 28 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்றைய தினம் அமோகமாக நடைபெற்று முடிந்தது. பல்வேறு கட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருவாசகங்கள் பாட சர்வ மத பிரார்த்தனைகளோடு நடைபெற்று முடிந்திருக்கிறது. விழாவில் தமிழ்நாடு ஆதீனங்கள் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோலை வழங்கினர். விழா நடந்து முடிந்தபிறகு, ஆதீனங்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 2024-லிலும் பிரதமர் நரேந்திர மோடி தான் வருவார் என்று புகழ்ந்து பேசியுள்ளனர். 

தருமபுரம் ஆதீனம் 

இந்திய பாராளுமன்றம் என்பது பாரத புண்ணிய பூமியின் சிறந்த அடையாளமாக திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புண்ணிய பூமியின் தன்மையை அறிந்து மங்கள இசையோடு, வேத கோஷங்கள், திருமுறை பண்ணிசையோடு யாகங்கள் வளர்த்து, சர்வ மத பிரார்த்தனையோடு இந்த விழா நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் அழைத்து வந்து சிறப்பித்ததற்கு பிரதமருக்கு ஆசிகளை தெரிவித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் முழுவதும் பிரதமருடைய சமய பற்று பரவியிருக்கிறது. பிரதமருடைய பணி தென்னகத்திலும் சிறக்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

மதுரை ஆதீனம்

1947-ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவிடம் தங்க செங்கோல் கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் கொண்டுபோய் ஒரு மூலையில் போட்டுவிட்டார்கள். ஜவஹர்லால் நேரு ஒன்றும் அற்புதங்களை செய்யவில்லை. அவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கஷ்ட நஷ்டமெல்லாம் தெரிகிறது. அதனால் தான் மக்களுக்கு நிறைய செய்கிறார். இலங்கை சிங்கள அரசு தமிழ் மக்களை தாக்கியபோது அவர்களுக்கு உணவளித்து வீடுகள் வழங்கி அவர்களுடன் பழகியவர் பாரத பிரதமர் அவர்கள். அம்பேத்கரின் நடவடிக்கையை அப்படியே செய்கிறார் பிரதமர். திருக்குறளை சொல்கிறார், தேவாரத்தை சொல்கிறார், திருவாசகத்தை சொல்கிறார். கொரோனா காலத்தில் எல்லா நாடுகளுக்கும் மருந்துகளை அனுப்பியவர். ஆகையால், 2024-ல் அவர்தான் வருவார். 

செங்கோல் ஆதீனம்  

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டின் ஆதீனங்களை அழைத்திருப்பது தமிழகத்திற்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறோம். செங்கோல் என்பது நீதியை காக்கின்ற ஒரு அடையாளச் சின்னம். முன்பு இருந்த மன்னராட்சி காலத்தில் செங்கோலை தங்களுடைய உயிராக போற்றி பாதுகாத்தார்கள். பாண்டிய மன்னன் கண்ணகிக்கு ஒரு தவறான நீதியை கொடுத்தபோது அந்த செங்கோல் வளைந்தது. தன்னுடைய உயிரை கொடுத்து அந்த செங்கோலை நிமிர்த்தியதாக வரலாறு உண்டு. மன்னர்களுக்கும் ஆதீனங்களுக்கும் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. நீதியோடு ஆண்மீகத்தோடு அந்த ஆட்சி நடத்த வேண்டுமென்று ராஜகுருவாக இருந்து ஆதீனங்கள் வழிநடத்தி இருக்கிறார்கள். செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியிருக்கிறார்கள் என்றால் இந்தியா ஒரு வல்லரசு நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பழனி ஆதீனம் 

1947-ம் ஆண்டு விடுதலை அடைந்தபோது செங்கோல் கொடுத்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சைவ ஆதீனங்களை வரவழைத்து சைவ திருவாசகங்கள் பாடி செங்கோலை நரேந்திரமோடியின் கையில் கொடுத்து ஆசீர்வதித்திருக்கின்றோம். இன்றைய நிகழ்வு ஒரு சிறப்பான நிகழ்வு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.