Tamil News
Tamil News
Sunday, 28 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தொடரும் சோதனை  

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும், அரசு டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  

வெளிமாநிலங்களில் அதாவது கேரள மாநிலம் பாலக்காட்டிலும், ஐதராபாத் நகரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இரண்டாவது நாளில், கரூர், கோவை, பொள்ளாச்சி, குளித்தலை உள்ளிட்ட இடங்களில்  வருமானவரிச் சோதனை நடைபெற்றது. குளித்தலையில் பிரேம்குமார் என்பவர் வீட்டில் 10-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகம் மற்றும் கோழி பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நேற்றைய தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

4-வது நாளாக தொடரும் வருமானவரிச் சோதனை

இந்தநிலையில், நான்காவது நாளான இன்றும் சோதனை நடந்து வருகிறது. கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் என்பவரின் அலுவலகத்தில் புகுந்து சுமார் 20 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சங்கரின் அலுவலகத்தை திறக்க யாரும் வராததால் வருவாய்த்துறை அதிகாரிகளின் சாட்சியோடு வருமானவரித்துறை அதிகாரிகள் அலுவலக பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், கரூரில் பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பங்களாவில் உள்ள 
தொழிலாளர்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சச்சிதானந்தத்தை வங்கிக்கு அழைத்துச்சென்று வங்கி கணக்குகள், லாக்கரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.