Tamil News
Tamil News
Monday, 29 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்திருக்கிறார்.   

துரை வைகோவை மதிமுக முதன்மைச் செயலாளராக்க திட்டம்

அண்மையில் மதிமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ தேர்வு செய்யப்படுவதாகவும், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கக் கூடிய துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என்று மே மாதம் 25-ம் தேதி தகவல் வெளியானது. மேலும், புதிய அவைத் தலைவராக கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் அர்ஜுன்ராஜும், மதிமுகவின் பொருளாளராக இருக்கக்கூடிய கணேசமூர்த்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில் புதிய பொருளாளர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சர்ச்சை கடிதம்

இதற்கு முன், மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவிற்கு எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கடிதத்தில், "மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்றும், மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும், மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்றும், வைகோ இன்னமும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதம் தற்போது புலியை தட்டியெழுப்பியிருக்கிறது என்றே பார்க்க முடிகிறது. 

மேலும், வைகோவின் குழப்ப அரசியல் காரணமாக பெருவாரியான மதிமுக தலைவர்களும், தொண்டர்களும் திமுகவிற்கே சென்று விட்டனர். 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகத்துடன் இணைக்க வேண்டும்" என்று கடிதமிட்டது வைகோ மத்தியில் பேரதிர்ச்சியை தந்தது. 

தானாக விலகல்

மதிமுகவின் அடுத்த வாரிசாக துரை வைகோவை, வைகோ முன்நிறுத்துவதாக கூறிவந்த திருப்பூர் துரைசாமி தற்போது மதிமுகவில் விலகுவதாக அறிவித்திருக்கிறார். திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்திருக்கிறார். மதிமுகவிற்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்த திருப்பூர் துரைசாமியை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரை வைகோ தெரிவித்திருந்தநிலையில், தற்போது தானாகவே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.