Tamil News
Tamil News
Monday, 29 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

அசோக் கெலாட் Vs சச்சின் பைலட்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எப்போதும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்குள் மட்டும் தான் பிரச்னைகள் எழும். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல் அடிக்கடி அரங்கேறும். ஆம், அது ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அடிக்கடி பனிப்போர் நிகழும். இவர்களின் சண்டைகளால் ஆட்சி கவிழும் அளவிற்கு கூட சென்றிருக்கிறது. 

பிரச்னையை உணர்ந்து காங்கிரஸ் மேலிடம், பனிப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கிடையில் தான், பாஜக ஆட்சி மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் அளித்திருந்தநிலையில், அடுத்த தேர்தலே வந்துவிட்டது எனக்கூறி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் சரியாக வழங்கப்படவில்லை என பல மாநிலங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால், அங்கும் பனிப்போர் ஆரம்பித்தது. பின்னர், நிலையை உணர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது காங்கிரஸ் மேலிடம். 

இணைந்தது கைகள்

இந்தநிலையில், இந்த ஆண்டு இறுதியில் வர இருக்கக்கூடிய ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ். அதற்கு முதலில், அங்கு நடைபெற்று வரும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும் கூட்டாக அழைத்துப் பேசி ஒரு சுமூகமான முடிவை முடித்து வைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது பனிப்போர்

அந்தவகையில், புதுடில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடன் ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். இறுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் முன்னிலையில் சமரசம் செய்து கொண்டனர். 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் இணைந்து செயல்பட சம்மதம் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. அதில், சச்சின் பைலட் தரப்பில் சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தநிலையில், அடுத்தடுத்து வர இருக்கக்கூடிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்று பெறுவதற்கு வியூகங்களை வகுத்து வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்று வந்த பனிப்போருக்கு முடிவுகட்டி, வர இருக்கக்கூடிய ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மேலிடம் ஒரு அச்சானியை போட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒன்றாக போட்டியிடுவார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.