Tamil News
Tamil News
Monday, 29 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.  

ஐந்து நாட்களாக தொடரும் சோதனை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும், அரசு டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  

செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை

கேரள மாநிலம் பாலக்காட்டிலும், ஐதராபாத் நகரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
மேலும், கரூரில் பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில்  நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பங்களாவில் உள்ள தொழிலாளர்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நோட்டீஸ்

இந்தநிலையில், சேலம் நெடுஞ்சாலை அருகே கட்டி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கரூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரரின் வீட்டில் காலையில் ஒரு நோட்டீஸ் ஒட்டிய நிலையில் மீண்டும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

சம்மன் 

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதற்கு, கரூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக அவகாசம் அளிக்குமாறு அசோக் மனு அளித்துள்ளார். ஏற்கனவே அசோக் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கரூரில் உள்ள அசோக்கின் அலுவலகத்தில் இன்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.