Tamil News
Tamil News
Tuesday, 30 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் ஒரு ஆண்டுகால பிரச்னையாக இருந்து வருவது மேகதாது அணை விவகாரம். கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் முக்கிய வாக்குறுதியாக கொடுப்பது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்பது தான். அந்தவகையில், நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். 

கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார்

இதையடுத்து, கர்நாடக அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. அதில் தமிழக அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் முக்கிய இலாகாவாக பார்க்கப்பட்டது நீர்ப்பாசனத்துறை. அந்தவகையில், நீர்பாசனத்துறை கர்நாடகா துணை முதலமைச்சரான டி.கே.சிவக்குமாருக்கு கொடுக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் துணை முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி 

எதிர்பார்க்கப்பட்டபடி, மேகதாது விவகாரம் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் மேகதாது எங்களது உரிமை, வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை" என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

துரைமுருகன் கண்டனம்

"பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம், கர்நாடகாவுக்கு அண்டை மாநிலத்துடன் நட்புறவை தொடரும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை" என்று அமைச்சர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். "தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். "தமிழக காங்கிரஸ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை. காவிரிநீரை பயன்படுத்துகிற மாநிலமாக பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் இருக்கிறோம். காவிரி நீர் தடுக்கப்பட்டால் நமக்கு சிரமம் வரும். எனவே, நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. அனைத்து தளங்களிலும் அதற்கு எதிரான கருத்துகளை தமிழக காங்கிரஸ் தெரிவித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.  

அடுத்ததாக, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.