Tamil News
Tamil News
Tuesday, 30 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஓரின சேர்க்கைக்கு தண்டனை 

ஓரின சேர்க்கை திருணம் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளிலும் ஓரின சேர்க்கை திருமணங்கள் சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், சில நாடுகள் ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், ஓரின சேர்க்கைக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஓரின சேர்க்கை என்பது குற்றம் 

78 வயதான உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி புதிதாக கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்கை எதிர்ப்பு சட்டத்திற்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே ஓரினச்சேர்கையாளர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டத்தை கொண்டு வந்த நாடாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டா மாறியுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 30 நாடுகளில் ஓரின உறவுகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக கடுமையான தண்டனைகளும் நடைமுறையில் உள்ளன. 

ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை 

எனினும் உகண்டா இதற்கும் ஒருபடி மேல் சென்று ஓரினச்சேர்கையாளர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. உகாண்டா சட்டப்படி ஒரே பாலின உறவு என்பது கடுமையான குற்றம் என்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் பரவலாம் என்றும் எனவே, அத்தகைய உறவில் தொடர்வது மோசமான குற்றமாக கருதப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், ஓரினச்சேர்கையாளர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தல் போன்ற தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும்  கூறப்பட்டுள்ளது. 

கடுமையான குற்றம் என கருதப்படும்

ஏற்கன்வே உகாண்டாவில் ஓரின சேர்கையாளர்கள் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டமை மற்றும் குழுக்களால் கொலை செய்யப்பட்ட வழக்குகளும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. உகாண்டா கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, ஓரினத்தை சேர்ந்தவர்கள் உடலுறவு கொள்வது, சேர்ந்து வாழ்வது, திருமணம் செய்து கொள்வது கடும் குற்றமாகும். 

பல நாடுகள் அதிருப்தி 

மேலும் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். உகண்டாவை போன்று கென்யா மற்றும் தன்சானியா நாடுகளும் ஓரினச்சேர்கையாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளன. இதற்கு ஓரின சேர்க்கையை அனுமதித்திருக்கும் பல நாடுகள் அதிருப்தியை தெரிவித்துள்ளன.