Tamil News
Tamil News
Thursday, 01 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே பதினேழு இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோரது  ட்விட்டர் கணக்கு நேற்றைக்கு முந்தைய தினம் முடக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப சட்ட விதிகளைமீறி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டதாக, மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ அறிக்கையை ஏற்று, அவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது.   

சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர்களின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

மேலும், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள் என்று கவிஞர் வைரமுத்து சீமானை புகழ்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,  

வன்மையாகக் கண்டிக்கிறேன்

சுட்டுரையை முடக்கிவிட்டால்
சீமான் தீர்ந்து போவாரா?

வெயிலுக்கு எதிராகக்
குடைபிடித்தால்
காணாமற் போகுமோ கதிரவன்?

கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;
கை கால்களைக் கட்டாதீர்கள்

கருத்துரிமை இன்னும்
உயிரோடு இருப்பதாக
நம்புகிறவர்களுள்
நானும் ஒருவன் 

இதையடுத்து, சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு சென்னை பெருநகர காவல்துறையின் தூண்டுதலின் பேரில்தான் முடக்கப்பட்டிருக்கிறது என்று சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இதையடுத்து, சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக நேற்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் கொடுத்தது. ட்விட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும், தவறான தகவல் பரப்புவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது.  

இந்தநிலையில், நேற்று "செந்தமிழன் சீமான்" என்கிற புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான். அதில் போடப்பட்ட முதல் பதிவு, தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். "கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி  கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது பதிவாக, கவிஞர் வைரமுத்துவிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். நேற்றைய தினம் சீமான் புதிய ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டநிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கை பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.