Tamil News
Tamil News
Sunday, 04 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

ரயில் விபத்து

கடந்த 02-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்து இந்தியா மட்டுமல்லாது உலகையே உலுக்கியிருந்தது. ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாகனகா பஜார் பகுதியில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்துக்குள்ளானது. இதில், 275 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒடிஷா அரசு தெரிவித்தது. 

மத்திய ரயில்வே துறை அமைச்சர்  பதவி விலக வேண்டும்

இதையடுத்து, விபத்து எப்படி நிகழ்ந்தது என்றும், இதற்கு யார் பொறுப்பேற்ப்பது என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. துயரமான இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்காமல் மத்திய அரசு எங்கும் ஓட முடியாது' எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் நடந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.  

கார்கே கடிதம் 
 
இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிக்னல் குறைபாடு காரணமாகத்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும், விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய காரணம் என்ன? கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டது. அந்த சமயத்தில் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கும் யாரையும் கைது செய்யாமல் முடித்து வைக்கப்பட்டது.

சி.பி.ஐ விசாரிக்க வேண்டிய காரணம் என்ன?

அதே போன்றுதான் தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் விபத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டிய காரணம் என்ன? பொதுவாக நாச வேலை நடந்திருக்கிறது என்றால் அதற்கு என்.ஐ.ஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம். ஆனால் அமைச்சரே சிக்னல் குறைபாடு காரணமாகத்தான் விபத்து நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படியும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் உண்மையாகவே ரயில் விபத்தில் சதி நடந்திருக்கிறதா? ரயில்வே துறையில் 18 லட்சம் பேர் பணி புரிந்த நிலையில் தற்போது 12 லட்சம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மீதமுள்ள 6 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? பணியாட்கள் இல்லாததால்தான் விபத்துகள் நடைபெறுகிறதா?

இதனால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ரயில் விபத்தை சதி எனக் கூறிய மோடி, இப்போது என்ன சொல்லப் போகிறார்? கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போதே அதிகாரிகள் சிக்னல் குறைபாடு இருக்கிறது என்று சொல்லியும் தற்போது வரை  மத்திய அரசு அதைச் சரி செய்யாமல் அலட்சியப்படுத்தியது ஏன்? ரயில்வே தனியார் மயமாக்குதல், அதன் தனி பட்ஜெட்டை ரத்து செய்து, பொது பட்ஜெட்டில் இணைத்ததனால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.