Tamil News
Tamil News
Monday, 05 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர். பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீண்ட நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷண் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

விவசாய சங்கம் ஆதரவு

இதையடுத்து, தாங்கள் பாடுபட்டு வென்ற பதக்கங்கள் இனி எங்களுக்கு தேவையில்லை என்றுகூறி பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர். பின்னர், அதை இந்திய விவசாய சங்கத் தலைவர்கள் தடுத்து நிறுத்தி நாங்கள் உங்களுக்கு நீதி பெற்றுத் தருகிறோம், எங்களுக்கு 5 நாட்கள் கெடு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்ட பின்னர், பதக்கங்களை கங்கையில் வீசுவதை நிறுத்தினர். 

அமித்ஷாவுடன் சந்திப்பு 

இந்தநிலையில், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நேற்று ஜூன் 5-ம் தேதி நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியானது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் பிரிஜ் பூஷண் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டிருப்பதாக மல்யுத்த வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில், மல்யுத்த வீரர்களுக்கு உறுதியான முடிவை உள்துறை அமைச்சர் வழங்கவில்லை, விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் அதன் பணியைச் செய்யும் என்றும், உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்திருந்தனர்.  

போராட்டத்தை கைவிடவில்லை

இதையடுத்து, சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து வெளியேறியதாக வெளியான செய்தியை மறுத்து சாக்க்ஷி மாலிக் ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார். அதில், "போராட்டத்திலிருந்து நான் விலகியதாக வரும் செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்திலிருந்து நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகப் போராட்டத்தை தொடர்ந்துகொண்டே, போராடும் அதேவேளையில் எனது ரயில்வே பணியையும் மேற்கொள்கிறேன். நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என தெரிவித்திருந்தார். 

பிரிஜ் பூஷண் வீட்டில் போலிஸ் விசாரணை
 

இந்தநிலையில், மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டுப் பணியாளர்களிடம் இன்று காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரிஜ் பூஷண் வீட்டில் இல்லாத நிலையில் பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.