Tamil News
Tamil News
Tuesday, 06 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக எம்.பி மீதான பாலியல் புகார் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பதக்கங்களை வீசுவோம்

இதற்கிடையே போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்திருந்தனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று நதியில் பதக்கங்களை வீசுவோம் எனக் கூறியிருந்தனர். 

சர்வதேச மல்யுத்த அமைப்பு கண்டனம்

மல்யுத்த வீரர்களின் கைதுக்கு சர்வதேச மல்யுத்த அமைப்பு கண்டனம் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிக்கிறது என்றும், பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விளையாட்டு அமைச்சகம் விடுத்துள்ள 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன செயற்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தவறினால், இந்திய மல்யுத்த அமைப்பை சஸ்பெண்ட் செய்து, வீரர்கள் தனிக் கொடியின் கீழ் விளையாட சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளது. 

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் ஆகியோட் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தாக கூறப்படுகிறது. 

போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு 

இந்தநிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாகவும், ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும்,  மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும்,  ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும் என அரசு உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.  அதைத் தொடர்ந்து பேசிய சாக்‌ஷி மாலிக், ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும். ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.