Tamil News
Tamil News
Wednesday, 07 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அசோக் கெலாட் Vs சச்சின் பைலட்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எப்போதும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்குள் மட்டும் தான் பிரச்னைகள் எழும். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல் அடிக்கடி அரங்கேறும். ஆம், அது ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அடிக்கடி பனிப்போர் நிகழும். இவர்களின் சண்டைகளால் ஆட்சி கவிழும் அளவிற்கு கூட சென்றிருக்கிறது. 

போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் 

பிரச்னையை உணர்ந்து காங்கிரஸ் மேலிடம், பனிப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கிடையில் தான், பாஜக ஆட்சி மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் அளித்திருந்தநிலையில், அடுத்த தேர்தலே வந்துவிட்டது எனக்கூறி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் சரியாக வழங்கப்படவில்லை என பல மாநிலங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால், அங்கும் பனிப்போர் ஆரம்பித்தது. பின்னர், நிலையை உணர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது காங்கிரஸ் மேலிடம். 

சமரசம் செய்து வைத்த காங்கிரஸ் தலைமை

இந்தநிலையில், இந்த ஆண்டு இறுதியில் வர இருக்கக்கூடிய ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ். அதற்கு முதலில், அங்கு நடைபெற்று வரும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும் கூட்டாக கடந்த மே மாதம் 30-ம் தேதி அழைத்துப் பேசி ஒரு சுமூகமான முடிவை முடித்து வைத்தது காங்கிரஸ் தலைமை.

அந்தவகையில், புதுடில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடன் ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். இறுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் முன்னிலையில் சமரசம் செய்து கொண்டனர். 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் இணைந்து செயல்பட சம்மதம் என காங்கிரஸ் தலைமை தெரிவித்தது. அதில், சச்சின் பைலட் தரப்பில் சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்பட்டது. 

காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தநிலையில், அடுத்தடுத்து வர இருக்கக்கூடிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்று பெறுவதற்கு வியூகங்களை வகுத்து வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்று வந்த பனிப்போருக்கு முடிவுகட்டி, வர இருக்கக்கூடிய ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மேலிடம் ஒரு அச்சானியை போட்டுள்ளது என்றே பார்க்கப்பட்டது. 

மீண்டும் பனிப்போரா? 

இந்தநிலையில், மறுபடியும் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடியை தூக்கியுள்ளார் சச்சின் பைலட். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மேலிடம் இருவருக்குமிடையே உள்ள பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து சமரசம் செய்து வைத்தநிலையில், தற்போது மீண்டும் கட்சிக்குள் பூகம்பத்தை கிளப்பியுள்ளார். சச்சின் பைலட், வரும் ஜூன் 11-ம் தேதி மறைந்த தனது தந்தையின் 23-வது நினைவு தினத்தில் புதிய கட்சி தொடங்க  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கட்சி தொடங்குவதற்கு சச்சின் பைலட்டிற்கு பின்னால் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.  

என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்.?

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இந்தநிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நடைபெற்று வரும்நிலையில், ஒரு வேளை சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது காங்கிரஸ் தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.