Tamil News
Tamil News
Friday, 09 Jun 2023 00:00 am
Tamil News

Tamil News

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசிற்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து கொண்டுதான் வருகிறது. அப்போது திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதும், பாஜக ஆளுநர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.       

அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனை விமர்சிக்கும் வகையில் ஆளுநர் ரவி, “நாம் கேட்பதாலோ, வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது” என தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றியும் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்திற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, ஆளுநரின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநரை விமர்சித்து கட்டுரை வெளியானதையடுத்து, தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசிற்கும் ஏற்பட்ட கருத்து மோதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதில் ஒரு பகுதியாக, "தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பெய ரில் ஒரு 'சுகஜீவி நியமிக்கப்பட்டு அவர் இப்பொது செய்து கொண்டிருக்கும் பணி இத்தகையதுதான்! ஆளுநருக்குத் தான் வேலையில்லை என்றால் தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணை வேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு நாம் குறிப்பிட்ட 'மேய்த மாட்டை நக்கிடும் மாடு' வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 

தமிழ்நாட்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அழைத்து, தனது அறிவிலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து தான் ஒரு "Half boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி தனது முதிர்ச்சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.  “நாம் கேட்பதாலோ, வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது" என்று பேசி அவலை நினைத்து உரலை இடித்துள்ளார்! அதாவது, தமிழ்நாடு முதல்வரை நினைத்து பிரதமர் மோடியை இடித்துள்ளார்" என்று கடுமையாக விமர்சனம் செய்தது முரசொலி. 

இப்படி, ஆளுநருக்கும் திமுக அரசிற்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் வாய்மூடி மெளனியாக இருக்கும் அதிமுக. ஆனால், இந்தமுறை, அதுமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ "ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டுவதுபோல அவருடைய பேச்சுக்கள் இருக்கிறது" என்று ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசியதாவது, 

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்களுக்கு அந்த ஆட்சி விரோதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஆளுநர் மற்றும் திமுக மோதலில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டுவதுபோல அவருடைய பேச்சுக்கள் இருக்கிறது. அவர் பேசுகிறாரா இல்லை அறிக்கை வருகிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை. அவர் பேசிய அரசியல் கருத்துக்களெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் ஆளுநரை ஆளும் கட்சி விமர்சிப்பதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் என்பவர் ஆட்சிக் கட்டிலுக்கு தலைமை தாங்கக்கூடியவர். அவர் இல்லாமல் ஒரு அனுவும் அசையாது. அவருடைய அனுமதியில் தான் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இவர்களுடைய மோதல்களால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது ஆளும் கட்சிக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல" என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.