Tamil News
Tamil News
Friday, 09 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனதால் வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

ஜுன் முதல் வாரத்தில் திறக்கப்படும் 

கோடை விடுமுறைக்குப் பின், தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் மாதம் 01-ம் தேதி திறக்கப்படும் என முதலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் வெளுத்து வாங்கியநிலையில், பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 07-ம் தேதிக்கு ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

தள்ளிப்போன பள்ளி திறப்பு

இருப்பினும், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் ஜூன் 5-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வெயிலின் தாக்கம் குறையாததையடுத்து, மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. அந்தவகையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வரும் ஜூன் 14-ம் தேதியும், 6 முதல் 12 வகுப்பு மாணாக்கர்களுக்கு வரும் ஜூன் 12-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட திட்டம்

இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, "கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்" என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.