Tamil News
Tamil News
Monday, 12 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் மருத்துவக் குழுவே நடத்தும் என்ற தேசிய மருத்துவ ஆணைய அறிவிக்கையினை திரும்பப்பெற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளநிலை மருத்துவம் முதுநிலை மருத்துவம், பட்டயப்படிப்பு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் தயாரித்தல், கலந்தாய்வு நடத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் தேர்வுக் குழுவால் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நடப்பாண்டிற்கான கலந்தாய்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 02-06-2023 நாளிட்ட அறிவிக்கை எண் 367-ஐ மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதில் 2023ம் ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பு ஒழுங்குமுறை நெறிகள் (Graduate Medical Regulations 2023) என்ற பெயரில் ஒழுங்குமுறை நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் மூன்றாவது அத்தியாயம்-III, பிரிவு 12ல், இந்தியாவிலுள்ள அனைத்து  மருத்துவக் கல்வி நிலையங்களிலும், நீட் மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. பிரிவு 14-ல், பொதுக் கலந்தாய்வு குறித்து இளநிலை மருத்துவக் கல்வி வாரியம், நெறிமுறைகளை வெளியிடும் என்றும், பிரிவு 15ல், அனைத்து இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை எந்த முகைமையின் மூலம் எந்த முறையில் கலந்தாய்வு நடத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும், பிரிவு 16ல் இந்த நெறிமுறைகளை முரணாக எந்த மருத்துவக் கல்வி நிலையமும் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும் மருத்துவக் கல்வி நிலையங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்ட்ய் நெறிமுறைகளில் உள்ள குறைந்தப்பட்ச தரத் தேவையை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில், மாநில அரசுகள் பின்பற்றிவரும் இடஒதுக்கீடு குறித்து இந்த அறிக்கையில் எதுவும் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. 

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையினைப் பார்க்கும்போது, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இருக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் தேர்வுக் குழுவால் நிரப்பப்படும் என்பது தெளிவாகிறது. இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீடே பறிபோகுமோ என்ற அச்சன் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. மேலும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு பொது கவுன்சிலிங் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த ஆண்டும் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு” என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.